சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-3 – எம்.ஏ. சுசீலா

தலைநாள் போன்ற விருப்பினன்….’’

 

காதலுக்கும் வீரத்துக்கும் சிறப்புத் தரும் சங்கப் பாடல்கள் கொடைக்கும் அதே உயர்நிலை அளிப்பவை. சங்கத்தின் இருமை நிலைகளாகிய அகம்-புறம் ஆகிய இரண்டில் புறம் என்னும் சொல் வீரத்தோடு கூடவே கொடையையும் உள்ளடக்கியிருக்கிறது. வீரத்தை விரிவாகவும் ஆழமாகவும் பாடிய சங்கப் புலவர்கள் அதே வீச்சுடன் கொடையையும் பாடிப் போற்றியிருக்கிறார்கள். பிழைப்புக்காக வேறு தொழில் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தமோ, உப்புக்கும் புளிக்குமான நெருக்குதல்களோ இல்லாதபடி – எழுத்தையும்  பாட்டையும் மட்டுமே வாழ்வாகக் கொண்டு  பாணர்களும் புலவர்களும் சங்கச் சமுதாயத்தில் சுதந்திரச் சிறகடித்துப் பறந்து திரிந்திருக்கிறார்கள் என்றால்..அதில்  அக்கால மன்னர்களின் வற்றாத கொடைவளம் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது. அந்தக் கொடையிலும் கூட அவர்கள் காட்டிய நுட்பம்..கண்ணியம் ஆகியவை நினைந்து நினைந்து வியக்கத்தக்க வகையில் பல சங்கப் பாடல்களில் பதிவாகியிருக்கின்றன.அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் குறுநில மன்னனின் புகழ் போற்றும் ஔவையின் கீழ்க்காணும் பாடல் அத்தகைய கொடைக் கணம் ஒன்றின் அற்புதச் சித்தரிப்பாக விரிகிறது.

‘’ஒரு நாட் செல்லலம் இரு நாட்செல்லலம்

பலநாள் பயின்று பலரொடு செல்லினும்

தலை நாட்போன்ற விருப்பினன் மாதோ

அணி பூண் அணிந்த யானை இயல்தேர்

அதியமான் பரிசில் பெறூஉங் காலம்

நீட்டினும் நீட்டாதாயினும் யானை தன்

கோட்டிடை வைத்த கவளம் போலக்

கையகத்ததுவே பொய்யாகாதே

அருந்த ஏமாந்த நெஞ்சம்

வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே’’

-ஔவை,புறநானூறு-101

அதியமானுக்கும் ஔவைக்கும் நிலவிய நட்பு, கொடுப்பவர் வாங்குபவர் என்ற சராசரி நிலையிலிருந்து உயர்ந்தது;அரிதும்,அபூர்வமுமான மேம்பட்ட தளத்திலானது. அதியனிடம் எல்லை கடந்த உரிமை பாராட்டிய ஔவை, அவனிடமிருந்து நெல்லிக் கனி பெற்றவள். அவனுக்காகப் போர்த்தூது சென்றவள்; அவனோடு பிணங்கியபடி தோள் பையைத் தூக்கிப் போட்டுக் கொண்டு அவனது அவையிலிருந்து வெளிநடப்பும் செய்பவள்; அவனோடு எதையும் துணிவாகப் பேசும் திடம் படைத்தவள்; அவன் இறந்தபோது கையறுநிலைப்பாடல்கள் பாடிக் கதறியவள். அதியனின் ஆளுமையை அணு அணுவாக அறிந்து வைத்திருக்கும் ஔவை அவனது கொடைத் திறன் குறித்து வழங்கும் நற்சான்றிதழாகவே இப் பாடல் விரிகிறது.

பொதுவாக விருந்தினர் வீட்டுக்கு வந்தால் முதல்நாள் உபசரிப்பு கொடிகட்டிப் பறக்கும்…அடுத்த நாள் சற்றே குறைந்து.., பின்பு படிப்படியாகச் சரிந்து – வந்த விருந்தாளிகளே எப்போது கிளம்பலாம் என்ற தருமசங்கடத்தில் நாணிக் கூசிப்போகிற நிலை கூட நேரும். ’‘முதல்நாள் வாழை இலை,இரண்டாம் நாள் தையல் இலை,மூன்றாம் நாள் கையிலே..’’என்னும் பழமொழியும் கூட அதைப் பற்றியதுதான்… அதை மாற்றிப் புதிய இலக்கணம் ஒன்றைப் படைக்கிறான் அதியமான்.

‘’ஒரு நாட் செல்லலம் இரு நாட்செல்லலம்

பலநாள் பயின்று பலரொடு செல்லினும்

தலை நாட்போன்ற விருப்பினன் மாதோ’’

என்னும் முதல் மூன்று வரிகள் சுட்டுவது அதைத்தான்.

விருந்தினர் தங்குவது ஒரு நாள் இரண்டு நாள் இல்லை…பலநாள் தங்கல்; அதிலும் பலரையும் உடன் சேர்த்துக் கொண்டு தங்கல்…ஆனாலும் கூட முதன் முதலாக விருந்தினரைக் கண்டபோது– அவர்களை வரவேற்றபோது எவ்வாறான மலர்ச்சியோடு இருந்தானோ அதே மலர்ச்சியும் உபசரிப்பும் மாதக்கணக்கில் அவர்கள் தங்கினாலும் அவனிடமிருந்து அவர்களுக்குக் கிட்டும் என்கிறார் ஔவை. இது இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தபின்னும் சங்க இலக்கியம் நமக்குப் புகட்டி வரும் அற்புதமானதொரு பண்பாட்டுப் பாடம்…

தன்னைத் தேடி வந்த வந்த பாணரும் புலவரும் அவ்வாறு மாதக் கணக்கில் தங்குவதற்கும் கூட அவர்களின் இசையை..கவியைப் பிரியத் துணியாத அவனது கலைத்தாகமே காரணமாக இருக்கிறது. அவர்களுக்கு எளிதில் விடை கொடுத்து அனுப்ப மனம் வராமல் அவன் காலம் தாழ்த்திக் கொண்டே இருப்பதற்கு அதுவே காரணம்; ஆனால்.. அதனாலேயே தங்களுக்குப் பரிசு கிடைக்குமா கிடைக்காதா  என்ற  ஐயமும் அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது; அதையும் தெளிவுபடுத்துகிறாள் ஔவை.

அதியனிடம் பரிசு பெறும் காலம் ஒரு வேளை சற்றுத் தள்ளிக் கொண்டே போகலாம்…உடனடியாகப்  பரிசைக் கொடுத்து அவர்களை வழியனுப்பி விடமனமில்லாமல்  அவனும் அந்தக் காலத்தை நீட்டித்துக் கொண்டே இருக்கலாம்..ஆனாலும் யானை தன் கொம்புகளுக்கு நடுவே துதிக்கையில் வைத்திருக்கிற சோற்றுக் கவளம் அதன் வாய்க்குத்தான் போய்ச் சேரும் என்பது எவ்வளவு நிச்சயமானதோ அவ்வளவு உறுதியானது அவனிடமிருந்து கிடைக்கும் பரிசும் என்பதை அடுத்த அடிகளில்..

’’அணி பூண் அணிந்த யானை இயல்தேர்

அதியமான் பரிசில் பெறூஉங் காலம்

நீட்டினும் நீட்டாதாயினும் யானை தன்

கோட்டிடை வைத்த கவளம் போலக்

கையகத்ததுவே பொய்யாகாதே’’

என்கிறாள் ஔவை. சோற்றுக் கவளத்தை யானை ஏந்தி விட்டால் அது அதன் வாய்க்குத்தான் போய்ச் சேரும்; அது எவ்வாறு உறுதியோ அது போல அதியனிடம் அடைக்கலமாக வந்து விட்டால் அவனிடமிருந்து பரிசு பெறுவதும் பொய்த்துப் போகாது என்பதை உறுதிப்படுத்துகிறாள் ஔவை. அதனால் அதை விரைவில் துய்க்க வேண்டும் என ஏக்கமுறும் (ஏமாந்த-ஏக்கமுற்ற)நெஞ்சங்களே…வருந்த வேண்டாம்..அவன் தாளை வாழ்த்துங்கள் போதும் என முடிக்கிறாள்.

’’தலை நாட்போன்ற விருப்பினன்’’என்ற  தொடர், குறிப்பிட்ட இந்தப் பாடலின் சூழலில் கொடையைச் சுட்டுவதாக இருக்கலாம்.;ஆனால்..நட்பு,காதல்,திருமண பந்தம் என எந்த ஒரு உறவானாலும்…,நாம் ஆர்வம் கொண்டு ஈடுபடும் எந்தச் செயலானாலும்.….முதல் நாள் கொண்ட ஆர்வமே வற்றாமல் தொடர்வதென்பது …,’தலை நாள் போன்ற விருப்பமே’ நாளும் தழைத்துச் செழிப்பதென்பது…எத்தனை பெரிய வரம்?அதனாலேயே ’யாதும் ஊரே..யாவரும் கேளிர்’,’ தீதும் நன்றும் பிறர் தர வாரா,’ ‘பெரியோரை வியத்தலும் இலமே’ ஆகிய பிற புறநானூறுத் தொடர்களைப் போலவே  ’’தலை நாட்போன்ற விருப்பினன்’’ என்ற  இந்தத் தொடரும் என்றும் நம் நெஞ்சுக்குள் அடைகாத்து முணுமுணுக்கும் ஒரு மந்திரத் தொடராக மாறிப்போகிறது.

This entry was posted in பத்திகள். Bookmark the permalink.

Leave a comment