’’இருபேராண்மைசெய்தபூசல்..’’

இணைமனம் கொண்ட காதலரிடையே நேரும் தற்காலிகப் பிரிவும் கூடப் பெருந்துன்பத்தின் நிலைக்களனாகி அவர்களை ஆறாத் துயரில் ஆழ்த்தி விடுகிறது. ’’பூ இடைப்படினும்’’ ஆண்டு பல கழிந்தது போல- பல்லாண்டு பிரிந்திருந்தது போல உள்ளத்தை உலுக்கி உன்மத்தம் பிடித்தாற்போல ஆட்டுவிக்கும் உத்வேகம் கொண்ட வினோதமான உணர்ச்சி அது. அதைச் சொல்லால் விளக்குவது கடினம்தான் என்றபோதும் காதல் வாழ்வில் நேரும் பிரிவுத் துயரின் தகிப்பைக் காட்ட ஒவ்வொரு காலகட்டத்துப் படைப்பாளிகளுமே முயன்றபடிதான் இருக்கிறார்கள். ‘’தூண்டிற்புழுவைப் போல் வெளியே சுடர் விளக்கினைப் போல்’’ பிரிவுத் துன்பத்தில் துடிக்கிறாள் பாரதியின் தலைவி.

’என்னை விட்டுப் பிரியவே மாட்டேன் என்று கூறுவதானால் தொடர்ந்து என்னிடம் பேசுங்கள்…, அவ்வாறு இல்லாமல் போய் விட்டு உடனே திரும்பி விடுவேன் என்றெல்லாம் சொல்வதாக இருந்தால்..நீங்கள்  திரும்பி வருகையில் உயிர் வாழும் திடம் யாருக்கு இருக்கிறதோ அவளிடம் அதைச் சொல்லுங்கள்’’ என்றபடி அவன் பிரியும்போதே தன் உயிரும் பிரிந்து விடும் என்பதை,

‘’செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின்

வல்வரவு வாழ்வார்க்கு உரை’’

என்று குறிப்பாக உணர்த்துகிறாள் வள்ளுவத்தின் காமத்துப்பால் தலைவி.

ஔவையாரின் குறுந்தொகைப்பாடல் ஒன்று தலைவன் தலைவியரின் பிரிவின்போது நேரும் மனப் போராட்டத்தைச் சுருக்கமான செறிவான சொற்களில் சித்திரமாக்கி அளிக்கிறது.

‘’செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே

ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே

ஆயிடை இரு பேராண்மை செய்த பூசல்

நல்லராக் கதுவியாங்கு என்

அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே’’-

குறுந்தொகை-43,ஔவை

இரு வேறான ஆளுமைகளின் தனிப்பட்ட எண்ண ஓட்டங்களில் நேரும் சிறியதொரு முரண்பாட்டால் நேரும் பூசலைச் சித்திரிக்கும் அற்புதமான கவிதை இது.

தலைவன் பொருள் தேடவோ தொழில் நிமித்தமாகவோ தலைவியைப் பிரிந்து செல்ல நினைக்கிறான். ஆனால் அதைச் சொன்னால் அவள் எந்த அளவு ஏற்பாள் என்பதும் அந்தப் பிரிவைப் பொறுக்கும் மனத் திட்பம் அவளிடம் உள்ளதா என்பதும் தெரியாத காரணத்தால் ஓர் ஊசலாட்டத்தில் இருந்தபடி அதை அவளிடம் சொல்லாமல் ஒத்திப் போட்டுக் கொண்டே இருக்கிறான் அவன்…

தலைவனுக்குப் பிற கடமைகளும் உண்டு என்பதும் அவற்றின் பொருட்டு அவன் தன்னைப் பிரிந்தே ஆக வேண்டியிருக்கும் என்பதும் தலைவிக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் ஏதோ ஒரு மாயப் பிரமையில் அவன் அப்படித் தன்னை விட்டுச் சென்றுவிட மாட்டான் என்று எண்ணியவளாகத் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள் தலைவி.

வீட்டுக்குள் ஒரு மௌன நாடகம் தொடர்ந்து நடந்தேறிக் கொண்டே இருக்கிறது.

அவன் எங்கோ கிளம்ப ஆயத்தமாகிறான் என்பது உணர்வுக்குத் தட்டுப்பட்டும் ’அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது’ என்று தன்னுள் தலையெடுத்த உணர்வைச் சட்டென்று புறமொதுக்கிவிடுகிறாள் தலைவி. அவளிடம் எப்படிச் சொல்வதென்ற தயக்கத்தில் தலைவனும் அந்தச் செய்தியைச் சொல்லாமல் ஒதுக்கிவிடுகிறான். இவ்வாறு தங்கள் ஆழ்மனம் ஏற்கத் தயங்கும் பிரிவு பற்றிய அச்சம் இருவர் வாய்ச்சொற்களையும் கட்டிப்போட்டு விடுகிறது.

இதையே

’செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே

ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே’’என்னும் கவித்துவமான வார்த்தைகளில் சிறைப்பிடிக்கிறார் ஔவையார்.

’இகழ்தல்’ என்னும் சொல் மரபார்ந்த-வழக்கமான பொருளில் இங்கே பயன்படுத்தப்படவில்லை என்பதும் சொல்வதற்குத் தயக்கமான அல்லது சொல்லப்பிடிக்காதவற்றைச் சொல்லாமல் ஒத்திப் போடுதல் என்னும் பொருளிலேயே அது இங்கே ஆளப்பட்டிருக்கிறது என்பதும் கவிதையின் மொத்தப் பொருளுக்குள் நுழையும்போது தன்னால் புலப்பட்டு விடுகிறது.

சிக்கலான இந்த உணர்வுப் போராட்டத்துக்கு இடையே சூழலின் கைதியாகி வெளியே சென்றே ஆக வேண்டிய நிலையில் இருக்கும் தலைவன் அவளிடம் சொல்லாமலேயே சட்டென்று ஒரு கணத்தில் கிளம்பிச் சென்று விடுகிறான். அந்தச் செயல் எதிர்பாராத கணத்தில் நல்ல பாம்பு தீண்டியதைப் போல- தலைவியைத் துணுக்குற வைக்கிறது. அவன் செல்ல மாட்டான் என்ற தன் நினைப்பு, தன்னிடம் பிரிவைச் சொல்லத் தயங்கிய அவன் மனஓட்டம் இவை இரண்டுக்கும் இடையிலான போராட்டம்……தன்னிடம் விடை பெற்றுக் கொள்வதிலிருந்து அவனைத் தடுத்து விட்டதே என்று அலைக்கழிவு பட்டு ஆறாத் துன்பம் கொண்டவளாய் அலமலக்குறுகிறாள் அவள். ஒருக்கால் அவ்வாறான ஒரு சூழல் வாய்த்து அவன் தன்னிடம் விடை பெற்றிருந்தால் தன் அன்பும் முயற்சியும் சேர்ந்து அவன் பிரிவைக் கூடத் தடுத்திருக்குமோ என எண்ணுகையில் அவள் துயர் பல்கிப் பெருகுகிறது..மனம் விரும்பாததை மனம் விட்டுப் பேசத் தவறியதால் மனம் விரும்பாத நிகழ்வு ஒன்று நடைபெறத்  தானே காரணமாகி விட்டோமே என்ற சோகம் அவளைப் பாம்புக் கடியாய் வதைக்கிறது.

தலைவன் தலைவி இருவரின் வேறுபட்ட ஆளுமைக் குணங்களையே ‘இரு பேராண்மை செய்த பூசல்’ என்னும் தொடரால் குறிப்பிடுகிறார் கவிஞர். (இது தனி மனித ஆளுமைப் பண்பேயன்றி ஆடவருக்குரிய ஆண்மையைக் குறிப்பதல்ல). தலைவியின் ஆளுமை ,தன்னை மீறி அவன் சென்றுவிட மாட்டான் என்னும் துணிவு.., தலைவனின் ஆளுமையோ அவளிடம் சொல்லத் துணிவின்றிச் செயலை மட்டும் முடித்துக் கொண்டு விடும் ஆளுமை…இவ்விரு ஆளுமைக் குணங்களின் மோதல் ஔவையிடமிருந்து எளிமையும் இனிமையும் கொண்ட அழகான சங்கப் பாடல் ஒன்றை உருவெடுக்க வைத்திருக்கிறது.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s